மெய்யறிவு
திடீர் என்று ஒரு நாள் நம் வாழ்வில் இருந்து கவலை என்ற ஒன்று காணாமல்போய்விட்டால் இவ்வுலகில் பலரும் தாங்கள் இறந்து விட்டதாக நினைத்துக்கொள்வார்கள். பலரும் தங்கள் வாழ்வில் ஒரு பிரச்சினையோடு போராடி கவலைக்கொள்வதையே வாழ்வதற்க்கான அடையாளமாக கருதுகிறார்கள். சிறிதளவு ஊர்ந்து கவனித்தோமானால் கவலை, சந்தோஷம் மற்றும் பல சுகங்களும் இன்னல்களும் நம் சிந்தனையின் குழந்தைதான் என்பதை உணர்வோம். இதை எழுதும் பொழுதும் படிக்கும் பொழுதும் வருகிற சிந்தனை நம் வாழ்வில் ஒரு சுகமோ அல்லது ஒரு இன்னலோ வரும் பொழுது நம்மால் உணர இயலாது. எவனொருவன் தன்னை நன்கு அறிந்து உணர்கிறானோ அவனே மெய்ஞ்ஞானம் பெற்றவனாவான்.
பல மாதங்களுக்கு பிறகு நான் என் முகநூல் கணக்கில் புகுபதிவு செய்தேன், என்னுடைய காலக்கோட்டில் என் நண்பர்களின் பதிவுகள் அனைத்தும் சிரியாவில் நடக்கும் போரைப்பற்றியும் ஸ்ரீதேவியின் இறப்பைப்பற்றியும் இருந்தன. இரண்டு நிகழ்வுக்கும் ஒரு ஒற்றுமை அழிவு தான். அவ்வழிவை செய்தி என்ற ஒரு பொருளாக்கி வியாபாரம் செய்யும் ஊடகங்களின் சந்தையாக மக்களை ஆக்கிவிட்டார்களே என்று நினைக்கும் பொழுது வேதனை அளிக்கின்றது. சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஒன்று மீம்ஸ், அக்காலத்தில் தினசரிகளில் அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை கேலிச்சித்திரமாக வரைந்து மக்களுக்கு புரியவைப்பார்கள். அவை கேலியாக இருந்தாலும் சிந்தனையை தூண்டும் வகையில் இருக்கும். ஆனால் இன்று மீம்ஸ் எனப்படும் கேலிக்கூற்றில் சிந்தனை சிறிதளவிலும் சிரிப்பும் அவதூறும் பெரிதளவிலும் உள்ளது.என்றைக்கும் சிரிப்பும் சிந்தனையும் சமமாக இருக்க வேண்டும், அப்படி இருக்கும் சமூகமே மெய்யறிவாய்ந்த சமூகம்.