எங்கே சென்று கொண்டிருக்கின்றது நமது சமூகம். அனைவரும் ஒருவிதமான அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றோம். சமூகம் என்பது சமூகவலைத்தளமாகிவிட்டது, கருத்துச்சுதந்திரம் சிதைந்துபோய்விட்டது. சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கண்டு அனைவரும் பொங்கியெழுகின்றார்கள் சமூகவலைத்தளங்களில் - சமூகத்தில் அல்ல. அனைத்திற்கும் அனைவரும் கருத்துகளை சரமாரியாக பரிமாறிக்கொள்கிறோம், மறுநிமிடமே அக்கருத்திற்கு எவ்வளவு கமெண்டுகளும், லைக்ஸ்களும் வரும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றோம். அனைத்து நிகழ்வுகளுக்கும் அனைவரும் கருத்து சொல்லவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நமது சமூகத்திற்கு விஷமானது. ஒரு பிரச்சனை என்றால் ஒரு காரணமும் ஒரு விளைவும் கண்டிப்பாக இருக்கும், அதேபோல் அப்பிரச்னைக்கு தீர்வே இறுதியானது கருத்துக்கள் இல்லை என்ற புரிதல் நமக்கு அவசியமானது.
Wednesday, April 18, 2018
Saturday, April 14, 2018
மாசற்ற உணவும், சிந்தனையும் மகத்தானது...
இவ்வுலகில் மனிதன் உயிர்வாழ்வதற்கு மிகமுக்கியமான மூன்று அடிப்படை தேவைகள் உன்ன உணவு, உடுத்த உடை, இருக்க வீடு. இம்மூன்றில் முதலிடம் உணவிற்கே, ஏனென்றால் மனிதன் வயிற்றுப்பசிக்கு உணவே சிறந்த மருந்தாகும். "பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் - மனிதனுக்கு பசி எடுக்கும் பொழுது மனித நற்பண்புகளான அன்பு, அருள், இரக்கம், கருணை, மானம், உண்மை, அறிவு, குடிப்பிறப்பு, நன்மதிப்பு, நேர்மையாக நடத்தல் ஆகிய அனைத்தும் ஒருவனை விட்டு நீங்கிவிடும் என்பதே. இப்பழமொழியை ஊர்ந்து கவனித்தோமானால் ஒன்று நன்றாக புரியும் - இச்சமுதாயத்தில் ஒருவன் தனது நற்பண்புகளை காத்து நற்பெயரை சம்பாதிப்பதற்கு பெரும் உந்துகோலாக இருப்பது "பசி" மட்டுமே. ஆனால் அப்பசி என்ற உணர்வு பல சமயங்களில் பிணியாகவும் காட்சியளிக்கின்றது. ஏனென்றால் பசிக்காக இவ்வுலகில் பல குற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கின்றது.
அக்குற்றங்களை இரண்டாக பிரித்துக்கொள்ளலாம் தனி மனித குற்றம், உலகளாவிய குற்றம். தனி மனித அளவில் நடக்கும் குற்றங்களால் மனித இனத்திற்கே பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை ஆனால் உலக அளவில் பசியை போக்குவதற்காக நடக்கும் குற்றங்களில் முதன்மையான இடம் இயற்கையை போற்றும் வேளாண்துறையில் செயற்கையின் பங்களிப்பே. இயற்கையின் எதிர்சொல் தான் செயற்கை. மனிதன் எவ்வளவு முயன்றாலும் இயற்கையின் நன்மதிப்புகளை செயற்கையில் பெற இயலாது. இவ்வுலகத்தில் மிகச்சிறந்த மருந்து உணவே - அவ்வுணவு இயற்கையானதென்றால் அது மருந்தாகும் அதுவே செயற்கையானதாக இருந்தால் அதுவே விஷமாகவும் இருக்கும். இயற்கையும் செய்ற்கையும் என்றைக்குமே முரணாகத்தான் இருக்கும் என்ற புரிதல் நமக்கு அவசியமான ஒன்று. இவ்வுலகம் தோன்றிய காலம் முதலே பல பரிணாம வளர்ச்சிகளை கண்டிருக்கின்றது - அதில் மிக முக்கியமான ஒன்றுதான் மனிதனின் சிந்தனையும் செயலாற்றலும். அச்சிந்தனையின் மூலமே பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனித வாழ்வை முற்றிலும் மாற்றி அமைத்த தொழிற்புரட்சி தோன்றியது. அத்தொழிற்புரட்சியால் அணைத்து துறையிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. விஞ்ஞானிகளின் சிந்தனைக்கு ஏற்ற உணவாக அமைந்தது அப்புரட்சி. மனித வாழ்வியலையே மாற்றியமைத்தது. அணைத்து துறைகளையும் ஒரு புயலைப்போல புரட்டியெடுத்தது என்று தான் கூறவேண்டும். அப்புயலின்தாக்கம் வேளாண்துறையையூம் விட்டுவைக்கவில்லை.
மனித சிந்தனையின் கொடூரக்குழந்தையே செயற்கை முறையில் உணவு தயாரிப்பதை கண்டறிந்தது. அக்கண்டுபிடிப்பை இக்கணமும் நாம் அனைவரும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றோம் - அதன் பின்விளைவுகளை கருதாமல். வேளாண்துறையில் பலவிதமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது. அனைத்தும் ஒன்றையே நோக்கியிருந்தது - மனித வாழ்வை எளிமையாக்குவதையே. நம்முடைய அனைத்து செயல்களுக்கும் ஒரு காரணமும் அதனால் ஒரு விளைவும் கண்டிப்பாக இருக்கும், இதனை ஆங்கிலத்தில் காஸ் & எபெக்ட் தியரி என்று கூறுவார்கள். வேளாண்துறையில் பயிர் உற்பத்தியிலிருந்து உணவை மேம்படுத்துவது வரையில் அனைத்திலும் இன்று செயற்கை முறை தான் பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் மனிதனின் சிந்தனையை சிதைக்கும் "ஆசை" என்ற பேராபத்துதான். கடவுள் மனிதனுக்கு அளித்த மிகமுக்கியமான பண்பு சிந்தித்து செயல்படுவது, அப்படி சிந்திக்கும் மனிதன் அச்சிந்தனையை செயலாக்கும் பொழுது அதன் நற்பண்புகளையும் தீயபண்புகளையும் ஆராய்ந்து செயல்படவேண்டும். ஆனால் அத்தகைய ஆராயும் திறனை மனிதனின் "ஆசை" அவனது மூளையை நெருங்கவிடாது. செயற்கை முறையில் விளைச்சலை அதிகரித்து, லாபத்தை பல மடங்குகளாக உயர்தலாம் என்ற மனிதனின் "ஆசை" வாழ்வின் முதன்மை தேவையான உண்ணும் உணவை மாசுபடுத்திவிட்டது. மனித எண்ணம் ஆசையால் மாசுபடிந்திருக்குமேயானால், அவன் செயல்களும் மாசடைந்தே இருக்கும். செயற்கை விவசாயம் என்ற பெயரில் பலவிதமான ரசாயன உரங்களை பூமியில் செலுத்தி அதன் இயற்க்கை தன்மையை அழித்து மலடாக்கி விட்டோம்.
உலக அரசியலில் செயற்கை விவசாயம் பெரும் பங்கினை வகிக்கின்றது, ஏனென்றால் இதை கண்டறிந்த மேற்கத்திய பண முதலைகள் கிழக்கை அக்கண்டுபிடுப்புக்கான சந்தையாக மாற்றிவிட்டார்கள். மற்றவர்களின் பயம் நமது பலம் என்பார்கள், அதுபோலவே கிழக்கத்திய நாடுகளில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினை பரப்பி இயற்கையில் வாழ்ந்துகொண்டிருந்த நம்மை செயற்கை முறைக்கு குடிபெயர்த்துவிட்டார்கள். சுவாமி விவேகானந்தர் அன்று சொன்னது போல் - கிழக்கத்திய மக்களுக்கு ஒன்றை நம்பவைக்கவேண்டுமென்றால் அது மேற்கில் இருந்துதான் வந்தாகவேண்டும். அவர் பதினெட்டாம் நூற்றாண்டில் சொன்னதிற்கு ஏற்றவாறு நாம் இன்று வரை மேற்கில் இருந்து ஏத்துவந்தாலம் பேணிப்போற்றுகின்றோம்.
இன்றைக்கு இச்செயற்க்கையின் பிடியில் இருந்து விடுதலை அடைவதற்கு நாம் என்னற்ற வழிகளை மேற்கொண்டுவருகிறோம். அதன்படி நமது சிந்தனையை இயற்க்கை விவசாயத்தில் செலுத்தி அதன் நற்பண்பினை ஆராய்ந்து, ஆசையை கட்டுக்குள்வைத்து ஒரு முடிவெடுத்தோமானால் நமது அடுத்த தலைமுறையினருக்கு இவ்வுலகை ஒரு பூந்தோட்டமாக பரிசளிக்க முடியும் இல்லையேல் இவ்வுலகம் ஒரு இடுகாடாக தான் மாறும். அகம் மாற்றமடைந்தால் புறம் தானாக மாற்றமடையும் என்பதை புரிந்து வழிநடப்போம். செயற்க்கையை தவிர்த்து இயற்கையை பேணிக்காப்போம்.
Monday, April 9, 2018
நம்மிடையே பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது அதாவது திருமண வாழ்வில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக சம்பாதிக்கவேண்டும் என்பது. இக்கருத்தையுடையவர்கள் முட்டாள்தனத்தின் உச்சத்தை ப்ரதிபலிக்கின்றவர்களாவார்கள். ஏனென்றால் இவ்வுலகில் வாழும் உயிரினங்களில் மனித இனம் மட்டும் தான் இப்படி ஒரு முட்டாள்தனமான கருத்தையுடைவர்கள். நம் சமூகத்தில் என்றைக்கு ஆணும் பெண்ணும் சமம் என்ற ஒன்று சொல்லில்மட்டுமில்லாமல் மக்களின் எண்ணஓட்டத்திலும் செயலிலும் ப்ரதிபலிக்கின்றதோ அன்றைக்குத்தான் நாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லமுடியும் நாம் முன்னேறிவிட்டோமென்று.
திருமணத்திற்கு ஒழுக்கத்தை பாருங்கள் பணப்புழக்கத்தை அல்ல !!! ஒருவனிடம் ஒழுக்கம் இருந்தால் வாழ்க்கையை நடத்துவதற்கான பணப்புழக்கமும் வாழ்க்கையில் உயர்வும் தானாக வந்தடையும்.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்".
இக்கருத்தை என்னுளே இருந்து வெளிப்படுத்தியத்திற்கு காரணமாக இருந்த மூடர்களாக இருக்கும் என் குடும்பமக்களுக்கு (அனைவரும் அல்ல சிலர் மட்டுமே) மிக்கநன்றி. புரிந்தவர்களுக்கு பிடிக்காவிட்டால் தயவு செய்து நீங்களே என்னை உங்கள் முகநூலில் இருந்து நட்பழி செய்துவிடுங்கள்.
என்றைக்கு தமிழர்கள் நடிகர்களை நடிகர்களாக பார்க்கிறார்களோ அன்றைக்கு தான் தமிழகத்திற்கு வெளிச்சம். அதற்காக நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறு என்று கூறவில்லை, இந்தியா ஜனநாயக நாடு எனவே யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் அரசியலுக்கு வருபவர்கள் நல்ல குடிமகன்களாக இருக்க வேண்டுமேதவிர நல்ல நடிகர்களாக அல்ல. மக்கள் நடிகர்களை கொண்டாடுவதை தவிர்த்தாலே போதும் அவர்கள் அவர்களுடைய வேலையை பார்த்துவிட்டு செல்வார்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து பொழுது இருந்த நிலை வேறு இன்றைக்கு இருக்கும் நிலை வேறு. அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தங்களுடைய கருத்தை எளிதில் எடுத்துச்செல்லவும் புரியவைப்பதற்கும் சினிமாவை ஒரு சாதனமாக பயன்படுத்தினார்கள், இதை மக்கள் அன்றைக்கே புரிந்துகொண்டிருந்தார்கள் என்றால் தமிழகத்திற்கு நல்ல தலைவர்களை உருவாகியிருக்க முடியும். நம்முடைய முன்றைய தலைமுறை தமிழகத்தில் நல்ல நடிகர்களை உருவாக்கியதன் விளைவை நாம் இன்று அனுபவித்து கொண்டிருக்கின்றோம். ஒரு தலைவனின் பேச்சாற்றலில் மயங்காமல் அவனிடம் நல்ல செயலாற்றல் இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும். பேச்சுத்திறனை விட செயல்திறன் மிகவும் முக்கியம். முன்றைய தலைமுறை செய்த தவரை நாம் மறுபடியும் செய்ய வேண்டாம்.
Sunday, April 8, 2018
தமிழகத்தில் திராவிட அரசியலின் பெரும் சாதனை மக்களிடம் சாதி & மொழி பிரிவினை உண்டாக்கியது மற்றும் பகுத்தறிவை வளர்க்கிறோம் என்ற பெயரில் தமிழர்களை மூடர்களாகியது. என்றைக்கு சாதி என்ற பிணியில் இருந்து தமிழன் விடுபடுகிறானோ அன்றைக்கு தான் நம் தமிழ்நாடு ஒற்றுமையான நாடாக மாறும். மக்களே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் சாதி என்பது நமது கலாச்சாரம் அல்ல.இந்த மாற்றத்தை அரசியல்வாதிகள் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்த்தால் அது நம் முட்டாள்தனம் ஏனென்றால் இப்பிரிவினை தான் அவர்களின் வளர்ச்சிக்கான சொத்து. தமிழ் பழமையான மொழி தான் அதில் மாற்றுக்கருத்தே கிடையாது ஆனால் மற்ற மொழிகளையும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும் மதிக்கவும்வேண்டும். இன்று உலகமையமாக்குதலின் விளைவாக வேலைவாய்ப்பு என்பது ஒரு சமுத்திரம் போல இவ்வுலகம் முழுவதும் பரவி கிடக்கின்றது ஆகையால் தமிழை நேசிப்போம் மற்ற மொழிகளையும் ஆதரித்து கற்றுக்கொள்ளவோம். தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும், இதை இளைஞர்களாகிய நாம் பபுரிந்துகொண்டு தமிழை தமிழகத்தை தமிழனை வளர்ச்சி பாதையில் வழிநடத்துவோம்.
Subscribe to:
Posts (Atom)