இவ்வுலகில் மனிதன் உயிர்வாழ்வதற்கு மிகமுக்கியமான மூன்று அடிப்படை தேவைகள் உன்ன உணவு, உடுத்த உடை, இருக்க வீடு. இம்மூன்றில் முதலிடம் உணவிற்கே, ஏனென்றால் மனிதன் வயிற்றுப்பசிக்கு உணவே சிறந்த மருந்தாகும். "பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் - மனிதனுக்கு பசி எடுக்கும் பொழுது மனித நற்பண்புகளான அன்பு, அருள், இரக்கம், கருணை, மானம், உண்மை, அறிவு, குடிப்பிறப்பு, நன்மதிப்பு, நேர்மையாக நடத்தல் ஆகிய அனைத்தும் ஒருவனை விட்டு நீங்கிவிடும் என்பதே. இப்பழமொழியை ஊர்ந்து கவனித்தோமானால் ஒன்று நன்றாக புரியும் - இச்சமுதாயத்தில் ஒருவன் தனது நற்பண்புகளை காத்து நற்பெயரை சம்பாதிப்பதற்கு பெரும் உந்துகோலாக இருப்பது "பசி" மட்டுமே. ஆனால் அப்பசி என்ற உணர்வு பல சமயங்களில் பிணியாகவும் காட்சியளிக்கின்றது. ஏனென்றால் பசிக்காக இவ்வுலகில் பல குற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கின்றது.
அக்குற்றங்களை இரண்டாக பிரித்துக்கொள்ளலாம் தனி மனித குற்றம், உலகளாவிய குற்றம். தனி மனித அளவில் நடக்கும் குற்றங்களால் மனித இனத்திற்கே பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை ஆனால் உலக அளவில் பசியை போக்குவதற்காக நடக்கும் குற்றங்களில் முதன்மையான இடம் இயற்கையை போற்றும் வேளாண்துறையில் செயற்கையின் பங்களிப்பே. இயற்கையின் எதிர்சொல் தான் செயற்கை. மனிதன் எவ்வளவு முயன்றாலும் இயற்கையின் நன்மதிப்புகளை செயற்கையில் பெற இயலாது. இவ்வுலகத்தில் மிகச்சிறந்த மருந்து உணவே - அவ்வுணவு இயற்கையானதென்றால் அது மருந்தாகும் அதுவே செயற்கையானதாக இருந்தால் அதுவே விஷமாகவும் இருக்கும். இயற்கையும் செய்ற்கையும் என்றைக்குமே முரணாகத்தான் இருக்கும் என்ற புரிதல் நமக்கு அவசியமான ஒன்று. இவ்வுலகம் தோன்றிய காலம் முதலே பல பரிணாம வளர்ச்சிகளை கண்டிருக்கின்றது - அதில் மிக முக்கியமான ஒன்றுதான் மனிதனின் சிந்தனையும் செயலாற்றலும். அச்சிந்தனையின் மூலமே பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனித வாழ்வை முற்றிலும் மாற்றி அமைத்த தொழிற்புரட்சி தோன்றியது. அத்தொழிற்புரட்சியால் அணைத்து துறையிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. விஞ்ஞானிகளின் சிந்தனைக்கு ஏற்ற உணவாக அமைந்தது அப்புரட்சி. மனித வாழ்வியலையே மாற்றியமைத்தது. அணைத்து துறைகளையும் ஒரு புயலைப்போல புரட்டியெடுத்தது என்று தான் கூறவேண்டும். அப்புயலின்தாக்கம் வேளாண்துறையையூம் விட்டுவைக்கவில்லை.
மனித சிந்தனையின் கொடூரக்குழந்தையே செயற்கை முறையில் உணவு தயாரிப்பதை கண்டறிந்தது. அக்கண்டுபிடிப்பை இக்கணமும் நாம் அனைவரும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றோம் - அதன் பின்விளைவுகளை கருதாமல். வேளாண்துறையில் பலவிதமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது. அனைத்தும் ஒன்றையே நோக்கியிருந்தது - மனித வாழ்வை எளிமையாக்குவதையே. நம்முடைய அனைத்து செயல்களுக்கும் ஒரு காரணமும் அதனால் ஒரு விளைவும் கண்டிப்பாக இருக்கும், இதனை ஆங்கிலத்தில் காஸ் & எபெக்ட் தியரி என்று கூறுவார்கள். வேளாண்துறையில் பயிர் உற்பத்தியிலிருந்து உணவை மேம்படுத்துவது வரையில் அனைத்திலும் இன்று செயற்கை முறை தான் பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் மனிதனின் சிந்தனையை சிதைக்கும் "ஆசை" என்ற பேராபத்துதான். கடவுள் மனிதனுக்கு அளித்த மிகமுக்கியமான பண்பு சிந்தித்து செயல்படுவது, அப்படி சிந்திக்கும் மனிதன் அச்சிந்தனையை செயலாக்கும் பொழுது அதன் நற்பண்புகளையும் தீயபண்புகளையும் ஆராய்ந்து செயல்படவேண்டும். ஆனால் அத்தகைய ஆராயும் திறனை மனிதனின் "ஆசை" அவனது மூளையை நெருங்கவிடாது. செயற்கை முறையில் விளைச்சலை அதிகரித்து, லாபத்தை பல மடங்குகளாக உயர்தலாம் என்ற மனிதனின் "ஆசை" வாழ்வின் முதன்மை தேவையான உண்ணும் உணவை மாசுபடுத்திவிட்டது. மனித எண்ணம் ஆசையால் மாசுபடிந்திருக்குமேயானால், அவன் செயல்களும் மாசடைந்தே இருக்கும். செயற்கை விவசாயம் என்ற பெயரில் பலவிதமான ரசாயன உரங்களை பூமியில் செலுத்தி அதன் இயற்க்கை தன்மையை அழித்து மலடாக்கி விட்டோம்.
உலக அரசியலில் செயற்கை விவசாயம் பெரும் பங்கினை வகிக்கின்றது, ஏனென்றால் இதை கண்டறிந்த மேற்கத்திய பண முதலைகள் கிழக்கை அக்கண்டுபிடுப்புக்கான சந்தையாக மாற்றிவிட்டார்கள். மற்றவர்களின் பயம் நமது பலம் என்பார்கள், அதுபோலவே கிழக்கத்திய நாடுகளில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினை பரப்பி இயற்கையில் வாழ்ந்துகொண்டிருந்த நம்மை செயற்கை முறைக்கு குடிபெயர்த்துவிட்டார்கள். சுவாமி விவேகானந்தர் அன்று சொன்னது போல் - கிழக்கத்திய மக்களுக்கு ஒன்றை நம்பவைக்கவேண்டுமென்றால் அது மேற்கில் இருந்துதான் வந்தாகவேண்டும். அவர் பதினெட்டாம் நூற்றாண்டில் சொன்னதிற்கு ஏற்றவாறு நாம் இன்று வரை மேற்கில் இருந்து ஏத்துவந்தாலம் பேணிப்போற்றுகின்றோம்.
இன்றைக்கு இச்செயற்க்கையின் பிடியில் இருந்து விடுதலை அடைவதற்கு நாம் என்னற்ற வழிகளை மேற்கொண்டுவருகிறோம். அதன்படி நமது சிந்தனையை இயற்க்கை விவசாயத்தில் செலுத்தி அதன் நற்பண்பினை ஆராய்ந்து, ஆசையை கட்டுக்குள்வைத்து ஒரு முடிவெடுத்தோமானால் நமது அடுத்த தலைமுறையினருக்கு இவ்வுலகை ஒரு பூந்தோட்டமாக பரிசளிக்க முடியும் இல்லையேல் இவ்வுலகம் ஒரு இடுகாடாக தான் மாறும். அகம் மாற்றமடைந்தால் புறம் தானாக மாற்றமடையும் என்பதை புரிந்து வழிநடப்போம். செயற்க்கையை தவிர்த்து இயற்கையை பேணிக்காப்போம்.